திமுக ஆட்சியில் அமைச்சர் இல்லாத மாங்கனி மாவட்டம் : வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கட்சியினர் வேதனை

By எஸ்.கே.ரமேஷ்

திமுக ஆட்சியில், அமைச்சர் இல்லாத மாவட்டங்களாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளதாக கட்சியினர் வருத்தம் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானது. இதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2011, 2016 அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இருவரும் 5 ஆண்டுகள் முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட பர்கூர் மதியழகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கட்சியினர், மாவட்ட மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ-க்கள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதனால் கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட செங்குட்டுவன் வெற்றி பெற்று அமைச்சராக வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால் அவர் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக, பாமக வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் வழக்கறிஞர் ராஜேந்திரன் இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார். இதனால் சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் சேர்த்து, ராஜேந்திரன், மதியழகன், பிரகாஷ் ஆகியோரில் ஒருவருக்காவது அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் பிரதிநிதித்துவமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கும் அமைச்சராகும் வாய்ப்பும் இல்லை. இதனால் மாவட்டத்தின் சார்பாக குரல் கொடுக்கவோ, சமூக வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தவோ வாய்ப்பில்லாமல் போகிறது. மொத்தத்தில் மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்