நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:
ஒரு பகுதியில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் 6- ஆக இருந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை, தற்போது 12-ஆக உயர்ந்துள்ளது.
ஒரு வீட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருந்தால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் வீட்டிலிருக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான், மற்ற நபர்களுக்கு கரோனா பரவாமல் இருக்க வாய்ப்புள்ளது. தமிழக அரசு அறிவுறுத்தல்படி நீலகிரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் கடைகள் இயங்க அனுமதிக்கப்படும். முகக்கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள், கரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றாத நபர்களை கண்காணிக்க வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 51 முதல் 60-ன்படி நடவடிக்கையும் எடுக்க நேரிடும். உடல் ரீதியாக ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டாலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்.
நமது மாவட்டத்தில் உள்ள கோவிட் கேர் சென்டர் மற்றும் மருத்துவமனைகளில் 1,252 படுக்கைகள் உள்ளன. இதில் 427 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 825 படுக்கைகள் காலியாக உள்ளன. மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், வெளி மாவட்டங்களில் அதிக அளவில் கரோனா தொற்று பரவுவதால், நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் வெளியூருக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். அவசிய காரணங்களுக்காக பயணம் மேற்கொண்டால், திரும்பி வந்தவுடன் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago