கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகளுக்கு நினைவேந்தல் :

கூலி உயர்வு கேட்டு போராடியதால் சுட்டுக் கொல்லப்பட்ட கம்யூ னிஸ்ட் கட்சி தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

தொழிலாளர்களின் சவுக்கடிக்கு எதிராகவும், குத்தகைதாரர்களுக்கு பாதுகாப்பு கேட்டும், கூலிஉயர்வு கேட்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தலைமறைவாக இருந்து போராடிய கம்யூனிஸ்ட் தியாகிகளான வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோர் காவல் துறையினரால் 1950-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் 71-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தஞ்சாவூர் ரயிலடியில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 3 தியாகிகளின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.எல். லிபரேஷன்) மாவட்ட நிர்வாகி கே.ராஜன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாநகர நிர்வாகி அருள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரக் குழு உறுப்பினர் எம். போஸ்கனி, எஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவய்யா, சிஐடியு மாநகரக் குழு உறுப்பி னர் ராஜாஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE