பட்டுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை - பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் அமைக்க கோரிக்கை :

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பதிவு அலுவலக கட்டிடத்தில் தரைத்தளத்தில் எண்.1 இணை சார்பதிவாளர் அலுவலகமும், முதல் தளத்தில் எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நசுவினி ஆறு படுகை அணை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் வா.வீரசேனன் சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 1865-ம் ஆண்டு முதல் பதிவுத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு மற்றும் திருமணப் பதிவு, நிறுவனங்கள் போன்றவற்றை பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, நிர்வாக வசதிகளுக்காக கூடுதலாக ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்ட தணிக்கை அலுவலகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இந்த 3 அலுவலகங்களும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகின்றன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பதிவுத்துறை அலுவலகம் 4 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இதில், கீழ்தளத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும், முதல் தளத்தில் மாவட்ட பதிவுத்துறை (தணிக்கை) அலுவலகமும், 2-ம் தளத்தில் எண்:1 இணை சார்பதிவாளர் அலுவலகமும், 3-ம் தளத்தில் எண்:2 இணை சார் பதிவாளர் அலுவலகமும் இயங்கும் வகையில் கட்டிட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உட்பகுதியில் செய்யப்பட்டுள்ள அமைப்பின்படி, அலுவலகம் அமைந்தால், அது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்த அலுவலகங்களுக்குச் செல்ல போதிய வசதி இல்லை. சாய்வு நடைபாதையும் இங்கு அமைக்கப்படவில்லை. இதனால் பதிவுத் துறை அலுவலகத்துக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.

எனவே, பதிவுத்துறை தலைவர், பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பதிவுத்துறை வளாகத்தில் தரைதளத்தில் எண்.1 இணை சார்பதிவாளர் அலுவலகமும், முதல் தளத்தில் எண்.2 இணை சார்பதிவாளர் அலுவலகமும் இயங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்