தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி வேலூர் இளைஞரிடம் ரூ.1.16 லட்சம் மோசடி செய்ததாக மும்பையைச் சேர்ந்த இருவர் மீது சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்டங்களிலும் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்டு காவல் துறையினர் நியமிக்கப் பட்டனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு இயங்கி வருகிறது.
இந்தப் பிரிவில் செல்போன், இணையதளம் வழியாக நடைபெறும் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரிவில் முதல் வழக்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் தீபா (52). இவரது மகன் அக் ஷய் குமார் என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அதன்படி, அவரது செல்போனுக்கு மும்பையைச் சேர்ந்த தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அக் ஷய் குமாருக்கு ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதற்காக, அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு 6 கட்டங்களாக அக்ஷய் குமார் ரூ.1.16 லட்சம் தொகையை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை கொடுக்கவில்லை. வேலை கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அக்ஷய்குமாரின் தொடர் முயற்சிக்குப்பிறகு அவர்கள் போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து தனது தாயிடம் அக்ஷய்குமார் கூறியுள்ளார். இதையடுத்து, வேலூர் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவில் தீபா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன்பேரில், வேலை வாங்கிக் கொடுப்பதாகக்கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த ராகேஷ், ஜெ.கே.பானர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago