பண மோசடி புகாரில் பரவாக்கோட்டை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளராக இருந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை செயலாளராக பணியாற்றியவர் பாஸ்கரன்(60). அப்போது, இவர் போலி கையெழுத்து போட்டு, கூட்டுறவு சங்கத்தில் இருந்த பல்வேறு கணக்குகளிலிருந்து ரூ.19.72 லட்சம் எடுத்து பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொடுத்த தகவலின்பேரில் விசாரணை செய்த கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர், பின்னர் திருவாரூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், செயலாளர் பாஸ்கர் மீது வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்தார்.
மன்னார்குடி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், கடன் சங்கத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்தை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து வணிக குற்றப் புலனாய்வு போலீஸார் கூறியபோது, “10-க்கும் மேற்பட்டவர்களின் கணக்குகளிலிருந்து பாஸ்கரன் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், சற்குணத்தம்மாள் என்பவரின் கணக்கிலிருந்து மோசடி செய்த குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. மற்ற புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன” என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago