தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியாக அறிவிக்கப்பட்ட 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் நண்பரான எம்.கிருஷ்ணமூர்த்தி திமுக சார்பில் போட்டியிட்டு, 35,505 வாக்குகள் பெற்று, எம்எல்ஏவானார்.
பின்னர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் செல்லையாவிடம், திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி தோல்வியை சந்தித்தார்.
அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிடாத திமுக, 1989, 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியையே தழுவியது. 1996-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வென்றது.
2001 -ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமாகாவும், 2006-ம் ஆண்டு அதிமுகவும், 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், 2016-ம் ஆண்டு அதிமுகவும் இத்தொகுதியில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், 1967 தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் மருமகனான என்.அசோக்குமார் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அசோக்குமார் 23,503 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
54 ஆண்டுக்கு பிறகு இந்த தொகுதியில் திமுக வெற்றிபெற்றுள்ளது இப்பகுதி திமுகவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
பட்டுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 1996-ம் ஆண்டு திமுக சார்பில் பி.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக போட்டியிடவில்லை.
இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக களமிறங்கியது. இதில், தமாகா வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜனை 25,269 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான க.அண்ணாதுரை வென்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago