சிவகங்கை வாரச்சந்தையில் காய் கறி மூட்டைக்கு ரூ.50, சரக்கு லாரிக்கு ரூ.100 என கூடுதலாக 4 மடங்கு கட்டணத்தை ஒப்பந்ததாரர்கள் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இச்சந்தையில் சாலூர், இடையமேலூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
காய்கறி மூட்டைகள், பழப்பெட்டிகளுக்கு எடைக்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை நகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. காய்கறிகளை ஏற்றி வரும் லாரி, டிராக்டர், பஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ.40, ஆட்டோ, மாட்டு வண்டிக்கு தலா ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணத்தைவிட 4 மடங்கு கூடுதல் கட்டணத்தை ஒப்பந்ததாரர்கள் தற்போது வசூல் செய்கின்றனர். மேலும் முறையாக ரசீது கொடுப்பதில்லை. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் கூறியதாவது: கரோனா காலத்தில் வியாபாரிகள் மிகுந்த சிரமத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் மனிதாபிமானமின்றி நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 4 மடங்கு வசூலிக்கின்றனர். காய்கறி மூட்டை, தக்காளி மற்றும் பழப்பெட்டிக்கு குறைந்தது 50 ரூபாய் வசூலிக்கின்றனர். அதேபோல், காய்கறி ஏற்றி வரும் சரக்கு லாரிக்கு ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ரசீது கொடுக்காமல் துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
நகராட்சி ஆணையர் அய்யப்பன் கூறுகையில், நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பது குறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago