தி.மலை மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 456 அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (2-ம் தேதி) எண்ணப்பட உள்ளன. திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும், ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் 4 சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப் படுகின்றன.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 14 மேஜைகள் என 8 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் 112 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் என ஒரு மேஜைக்கு 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 112 மேஜைகளில் பணியாற்றும் 336 நபர்கள் மற்றும் அந்த எண்ணிக்கை அடிப்படையில், 20 சதவீதம் பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 456 வாக்கு எண்ணும் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஒதுக்கீடு, ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் கணினி குலுக்கல் முறையில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, “வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பகுதி, வாக்கு எண்ணும் பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் முழுமையாக செய்திருக்க வேண்டும் என்றும், கரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு வழங்க வேண்டும்” என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago