ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - நேற்று ஒரே நாளில் 952 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 952 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 400-ஐ கடந்து கரோனா தொற்று பதிவாகி வருகிறது. அதில். மாநகராட்சி பகுதியில் அதிகமாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 2,500-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட 30 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா சிறப்பு வார்டுகளுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்களிடம் இருந்து முழு ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநிலை நீடித்தால் மே 2-வது வாரங்களில் வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முக்கவசம் அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 9,825 -ஆக உயர்ந்துள்ளது. திருப்பத்தூர் நகர் பகுதியில் மட்டும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நகராட்சி சார்பில் முதற்கட்டமாக நேற்று 10 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அதேபோல, ஜோலார்பேட்டை, ஆம்பூர் உள்ளிட்ட நகராட்சிகளிலும் கரோனா தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று அதிகமுள்ள 367 இடங்கள் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 982 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரோனா பரிசோதனை முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம், ஆம்பூர் பேருந்து நிலையம், நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் ரயில் பயணிகளிடம் கரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நேற்று வழங்கி விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும். ரயில் பயணிகளுக்கு கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை ரயில்வே காவல் துறையினர் வழங்கினர். கரோனா தொற்று உள்ளவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்த 5,248 பேர் சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 5.61 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 52 ஆயிரம் பேருக்கு முதல் தடுப்பூசியும், 12 ஆயிரம் பேருக்கு 2-வது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் ரயில் பயணிகளிடம் கரோனா தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நேற்று வழங்கி விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்