ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியம் : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்துக்கு ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் இரா.கண்ணன் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கும், ரயிலில் வரும் பயணிகளுக்கும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நோய் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ள நபர்களை ரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்பு அறைகளில் தங்க வைத்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே போலீஸாருடன் இணைந்து, பரிசோதனைகள் மேற்கொள்ள வசதியாக ஒரே வழியில், நிலையத்தை விட்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக்கசாயம் ஆகியவற்றை பொது இடங்களில் வைத்து மக்களுக்கு வழங்க சித்த மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்திடவும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

அதோடு, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடவும், தீயணைப்புத் துறையினருடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து கேட்டறியப்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் போதுமான அளவு இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சுகதாரத்துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. மங்கள ராமசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சார் ஆட்சியர் (சிவகாசி) ச.தினேஷ்குமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்