இயற்கை விவசாய தரச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் கீழ் இயங்கும் பிரித்வி பாரம்பரிய இயற்கை உழவர்கள் அறக்கட்டளை அமைப்புக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் கீழ் இயங்கும் பிரித்வி பாரம்பரிய இயற்கை உழவர்கள் அறக்கட்டளை அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலச் செயலாளர் பந்தநல்லூர் அசோகன் தலைமை வகித்தார். பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர் ஜானகிராமன், முன்னோடி இயற்கை விவசாயி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாடு மண்டலக் குழு பொறுப்பாளர் ராம் பேசியது:
தகுதி வாய்ந்த இயற்கை விவசாயிகளை கண்டறிந்து, மத்திய அரசின் இயற்கை விவசாய தரச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு தற்போது பிரித்வி பாரம்பரிய இயற்கை உழவர்கள் அறக்கட்டளை அமைப்புக்கு வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி கடிதம் கடந்த வாரம் வரப்பெற்றுள்ளது.
இதன்மூலம் இந்த அமைப்பானது நெல் ஜெயராமன் ஆராய்ச்சி மைய உயர்நிலைக் குழுவின் வழிகாட்டுதல்படி பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை முறை வேளாண்மையை செய்து வருகின்ற விவசாயிகளை கண்டறிந்து சான்றளிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சான்றிதழை பெறும் விவசாயிகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் தாங்கள் விளைவித்த பொருளை நேரடியாக விற்பனை செய்ய முடியும். விளைபொருட்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். எதிர்காலத்தில் மத்திய அரசால் இயற்கை விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
நஞ்சில்லாத உணவு உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற இயற்கை முறையில் வேளாண் தொழில் செய்யும் விவசாயிகளை கண்டறிந்து சான்றளிப்பது பயனளிக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago