வேலூரில் கரோனா பரவலை தடுக்க மூன்றாம் பாலினத்தவர்கள் சார்பில் கூத்தாண்டவர் திருவிழா நேற்று நடத்தப்பட்டது. இதில், மூன்றாம் பாலினத்தவர்கள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு நடத்தி பூஜை செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
இதனால், தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற திருவிழாக்களில் கூவாகம் கூத்தாண்டவர் திரு விழாவும் இடம் பெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அழகி போட்டி, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி உட்பட பல்வேறு போட்டி கள் நடத்தப்படும். கூவாகம் திரு விழாவை ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா தடுப்பு நட வடிக்கை காரணமாக கூவாகம் திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் நடப்பாண்டுக்கான திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூரில் மூன்றாம் பாலினத்தவர்கள் சார்பில் கூத்தாண்டவர் திருவிழா நேற்று நடத்தப்பட்டது.
வேலூர் ஓல்டு டவுன் பஜனை கோயில் தெருவில் அரவானையை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் இதில் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் தலைவி கங்கா நாயக் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து மூன்றாம் பாலினத்தவர்கள் தாலி கட்டிக் கொண்டனர். பிறகு உற்சாகமாக ஆடிப்பாடி திருவிழாவை கொண்டாடினர். இதைத்தொடர்ந்து. பாரதி நகர் மயானப்பகுதியில் தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தாலி கட்டிக்கொண்ட மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவரும் தங்களது தாலிகளை அறுத்து ஒப்பாரி வைத்தனர்.
இவ்விழா குறித்து மூன்றாம் பாலினத்தவர்கள் கூறும்போது, ‘‘கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறவில்லை. தமிழகத்தில் கரோனா முதல் அலையை தொடர்ந்து, தற்போது 2-வது அலை வேகமாக பரவி வருவதால் திருவிழா நடக்கவில்லை.
இந்த கரோனா ஒழிய வேண்டும். நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக, நாங்கள் இங்கு சிறப்புப் பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டோம். தமிழக மக்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் கரோனாவில் இருந்து விடுபட வேண்டும். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு இயல்பு வாழ்வு திரும்ப வேண்டும். அடுத்த ஆண்டு கூவாகத்துக்கு சென்று விழாவில் பங்கேற்க வேண்டும் என சுவாமியிடம் பிரார்த்தனை செய்தோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago