கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி நேற்று முழு ஆதரவு தெரிவித்தனர். அனைத்து பகுதிகள், சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், மாவட்டத்தில் ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. குறிப்பாக, தேவாலயங்களில் ஞாயிறு திருப்பலி ரத்து செய்யப் பட்டதால், கிறிஸ்தவ மக்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர். உதகை மறை மாவட்டஆயர் அமல்ராஜ், தனது இல்லத்திலேயே ஞாயிறு திருப்பலியை நடத்தினார். மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வெளியில் நடமாடியவர்களை வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர். நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் இன்றும் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago