விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள் : ரயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு மட்டும் அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும், வாகனப் போக்குவரத்து இல்லாததாலும் சாலைகள் வெறிச்சோடின.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் கரோனா பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் 450-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து இல்லாமல் நகரச் சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ரயில் பயணிகளின் வசதிக்காக மட்டும் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து இன்றி மாவட்டத்தில் பேருந்து நிலையங்களும், மக்கள் நடமாட்டமின்றி சந்தைகள், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே வழக்கம்போல் செயல்பட்டன. ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் சேவை வழங்கம்போல் இருந்தன. பேருந்து நிலையங்கள், மார்க்கெட், பஜார் போன்ற இடங்களில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒரு சில இடங்களில் சாலைகளில் சென்ற பொதுமக்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

ராஜபாளையத்தில் முழு ஊரடங்கைப் பயன்படுத்தி பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காய்கறி மார்க்கெட், தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை சாலைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்