பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள சென்னிலைக்குடியைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள் (53). கடந்த 10-ம் தேதி கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், தனது ஏடிஎம் கார்டை கணவர் கிருஷ்ணனிடம் கொடுத்து வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு அறிக்கையை ஏடிஎம்மில் பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
திருச்சுழி ஸ்டேட் வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து மினி ஸ்டேட்மென்ட் எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துக் கொடுத்துள்ளார். அப்போது, பிச்சையம்மாள் வங்கிக் கணக்கில் ரூ.1,02,480 இருந்துள்ளதை அந்த மர்ம நபர் அறிந்துகொண்டு, தன்னிடமிருந்த அன்னமயில் என்பவரின் பெயரில் இருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை கிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர், பிச்சையம்மாள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அந்த மர்ம நபர் திருச்சுழி, விருதுநகர், மதுரை, திருப்புவனம் ஆகிய ஊர்களில் ஏடிஎம் மூலம் கடந்த 22-ம் தேதி வரை ரூ.1,02,480-ஐ எடுத்துள்ளார்.
இந்நிலையில், பிச்சையம்மாள் தனது வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு விவரத்தை பார்த்தபோது, பணம் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, திருச்சுழி காவல் நிலையத்தில் பிச்சையம்மாள் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago