உடுமலையில் அத்தி சாகுபடியால் அதிக வருவாய் : விவசாயிகளின் எதிர்பார்ப்பும், அதிகாரி விளக்கமும்

By எம்.நாகராஜன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடி செய்கின்றனர். சிலர் தைவான் நாட்டு ரக கொய்யா, ஹைபிரிட் மாதுளை, தர்பூசணி, நாட்டு ரக மாதுளையையும், இன்னும் சிலர் பாலைவனப் பகுதியில் வளரும் தன்மை கொண்ட பேரீச்சை பழத்தையும் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், வண்டு தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளிலேயே பேரீச்சை மரத்தை வேரோடு அகற்றிவிட்டனர். இதனால், விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டதுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் மட்டுமே தற்போது உற்பத்தியில் கோலோச்சிவரும் அத்தி மர சாகுபடி தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு, உடுமலை வட்டாரத்தில் சில விவசாயிகள் அதன் சாகுபடியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கிலோவுக்கு ரூ.100 விலை கிடைத்து வருவதால், இதன் நுகர்வு அதிகமாகும்போது தேவையும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால் உடுமலை வட்டாரத்தில் நிலவும் தட்ப, வெப்ப நிலை அத்தி சாகுபடிக்கு ஏற்புடையதா? என்பது பலருக்கும் சந்தேகமாக உள்ளது.

நுகர்வுக்கு ஏற்ப உற்பத்தி இல்லை

இதுதொடர்பாக அத்தி சாகுபடியில் விவசாயிகளுக்கு நாற்றுகள் விநியோகிப்பது, அவர்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் மணி என்பவர் கூறும்போது, "வறட்சியான தட்ப,வெப்ப நிலை அத்திக்கு ஏற்புடையதுதான். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. சொட்டு நீர் பாசனத்திலும் பலர் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தில் தற்போதைய நுகர்வு தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை. வெளி மாநிலங்களில் இருந்துதான் தருவிக்கப்படுகிறது. சாலைவழி போக்குவரத்தால் ஏற்படும் கால தாமதம், பழத்தின் தன்மையை பாதிக்கிறது. தமிழகத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில், மொத்த தேவைக்கும் சரியானதாக இருக்கும். வெளி மாநிலங்களில் இருந்து வரத்து தவிர்க்கப்படும். ஓர் ஏக்கர் சாகுபடி மூலமாக குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டலாம்’ என்றார்.

ஒன்றரை ஆண்டுகளில் பலன்

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறும்போது, "புதுமைகளை நாடும் விவசாயிகள் இருக்கவே செய்கின்றனர். வேளாண் பொருட்களுக்கு நிலவும் நிச்சயமற்ற விலைதான் அவர்களின் கவலை. அத்தி சாகுபடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலை மூலமாக நாற்றுகள் பெற்று சாகுபடி செய்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளில் அவை பலன் தர தொடங்கும். குறைவான பராமரிப்பு இருந்தால்போதும், இதற்கான வழிகாட்டுதல்களை சில தனியார் அமைப்புகள் செய்து வருகின்றன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்