திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி மரங்களை வெட்டி அழிக்கும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து நேற்றிரவு இயற்கை ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவல பாதையை ரூ.65 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, கிரிவலப் பாதையில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முயன்றனர். இதற்கு பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மரங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனால், பல நூறு மரங்கள் தப்பின. அதே நேரத்தில், 50-க்கும் மேற்பட்ட மரங்கள் திராவகம் மற்றும் தார் உள்ளிட்ட ரசாயன கழிவுகளை ஊற்றி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் கிரிவலப் பாதையில் குபேர லிங்கம் அருகே உள்ள பழமையான மரங்கள் நேற்று வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், கிரிவலப் பாதையில் சாலை மறியலில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி பழமையான மரங்களை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள், நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டி அழிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago