சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வந்துகொண்டிருந்த கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி கிருஷ்ணா நதி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரையும் ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும்.
ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், நடப்பாண்டுக்கான முதல் தவணை தண்ணீரை ஆந்திர மாநில அரசு வழங்கவில்லை. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையால் கண்டலேறு அணை நீர் இருப்பு கணிசமாக அதிகரித்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் விடப்பட்ட கிருஷ்ணா நீர், கடந்த 19-ம் தேதி முதல் விநாடிக்கு 175 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை-தாமரைக்குப்பம் பகுதிக்கு விநாடிக்கு வெறும் 20 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. நேற்று காலை 6 மணியளவில் தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது.
மொத்தத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி இரவு முதல் நேற்று வரை தமிழகத்துக்கு 7.66 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துள்ளது.
"கிருஷ்ணா நீர் வருகையாலும், ஏற்கெனவே தமிழகத்தில் பெய்த மழை காரணமாகவும் மொத்தம் 11, 757 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் 8,618 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இது இந்த ஆண்டு இறுதி வரை சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும்" என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி கிருஷ்ணா நதி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரையும் ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago