கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப்பணிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, பல்வேறு துறை அலுவலர்களுடன், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும். இந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், அரசால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா ரீதியாக நீலகிரி மாவட்டத்துக்கு வர அனுமதி இல்லை. மாவட்டத்தின் பல்வேறு எல்லைப்பகுதிகள் தொடர்ந்து திறந்து உள்ளன. எல்லைகள் மூடப்படவில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கும், மருத்துவ ரீதியாகச் சென்று வரவும், தொழில் தொடர்பாக சென்று வரவும் அனுமதி வழங்கப்படும். இதற்கு எந்த தடையும் இல்லை.
இரவு நேர ஊரடங்கின் போது தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு தெரிவித்துள்ளபடி நமது மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும், அன்றைய தினம் இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட், காய்கறிக் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
இவற்றை கண்காணிக்க நமது மாவட்டத்தில் ஊரகப் பகுதிகள் மற்றும் நகர் பகுதியில் குழுக்கள் அமைக்கப்படும் . மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு மட்டும் நடத்தப்படும்.
தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட சுகாதாரத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக் கூடாது.
கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுவதை கண்காணிக்க காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து செயல்பட குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. பிற மாவட்டத்திலிருந்து நமது மாவட்டத்துக்கு வருகை தரும் நபர்கள் இ-பதிவு முறையைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. 1800 டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago