விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என உழவர் உழைப்பாளி கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஓ.பி. குப்புதுரை தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு தேவைப்படும் மும்முனை மின்சாரம் இலவசமாக 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன்பலனாக தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் நலன் கருதி இனி 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதற்கான அரசாணையும் வெளியிட்டப்பட்டது.
இதன்படி விவசாயிளுக்கான மும்முனை மின்சாரம் சில தினங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மீண்டும் வழக்கம் போல மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை, என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மோகனூரைச் சேர்ந்த உழவர் உழைப்பாளி கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஓ.பி. குப்புதுரை கூறியதாவது:
விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு சில தினங்கள் மட்டுமே மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படுவதில்லை.
இரவு 11 மணிக்கு பின்னர் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுவிவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசாணையின்படி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago