நடிகர் விவேக் மறைவு - மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி :

நடிகர் விவேக் நேற்று முன்தினம் காலமானார். அவர் பசுமை கலாம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதனை நினைவுகூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் விவேக் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் நினைவாக மரக்கன்று நடப்பட்டது. ஊராட்சி தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் குமார், வாசகர் வட்ட துணைத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன் பங்கேற்றனர்.

சாத்தான்குளத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய நாடக நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. விவேக் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. டிரஸ்ட் நிர்வாகி மோகன்தாஸ் சாமுவேல் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் தளிர் பசுமை அமைப்பினர் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் விவேக் மறைவையொட்டி அவரது நினைவாக திப்பணம்பட்டியில் தளிர் அமைப்பிளர் மரக்கன்றுகள் நட்டனர். அப்போது, நடிகர் விவேக் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இதுவரை 33 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். அவரது கனவை நனவாக்க அதிகமான மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்து, விவேக் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

விவேக் கனவை நனவாக்க அதிகமான மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்து, அவரது மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE