கிருஷ்ணகிரியில் மா உற்பத்தி 30% மட்டும் மகசூல் கிடைக்கும் : ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் மா உற்பத்தி 30 சத வீதம் மகசூல் மட்டுமே கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்வாய், சொட்டுநீர் மற்றும் மானாவாரி பாசனங்கள் மூலம் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. மா ரகங்களை பொறுத்தவரை மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய ரக மா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஊறுகாய், ஜூஸ் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மா விளைச்சல் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நிகழாண்டிலும், இயற்கை இடர்பாடுகளால் மா உற்பத்தி 30 சதவீதம் மட்டுமே மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கேஆர்பி அணை இடதுபுற கால்வாய் நீட்டிப்பு பயனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவகுரு கூறியதாவது:

மாமரங்களில் அதிகளவில் பூத்திருந்தது. கடும் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகின. இதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் மழை பெய்யாததால், பூக்கள் பூத்தும் மரங்களில் காய் பிடிக்கவில்லை. இதனால், டிராக்டர் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி மாமரங்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாமரங்களில் 40 சதவீதத்திற்கு மட்டுமே காய்கள் இருந்தன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் மாமரங்களில் இருந்த மா பிஞ்சுகள் உதிர்ந்து விழுந்தன. இதன் காரணமாக நிகழாண்டில் மா உற்பத்தி 30 சதவீதம் மகசூல் மட்டுமே கிடைக்கும். தற்போது பெய்து வரும் கோடை மழையால் 10 முதல் 15 நாட்களுக்குள் மாங்காய்கள் நல்ல திரட்சியுடன் விளைச்சலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், மாமரங்களில் பராமரிப்பு, மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. விளைச்சல் கைகொடுக்காததால், விவசாயி களுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது.

மாவிவசாயிகளின் வாழ்வா தாரம் காக்க, அரசு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவிளைச்சலில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் சந்தைப்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்