தேனி மாவட்ட கல்லூரி விடுதிகள் கரோனா சிகிச்சை மையமாக மாற்றம் :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்ட கல்லூரி விடுதிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.

கரோனா தடுப்புப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தேனியில் நடந்தது.

ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தலைமை வகித்துப் பேசியதாவது: கேரளாவில் இருந்து வியாபார, விவசாயப் பணிகளுக்காக பலரும் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே தெருவில் மூன்று பேருக்கு மேல் தொற்று இருந்தால் அதனை நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்படி தற்போது வரை தேனி மாவட்டத்தில் 24 நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போடி பொறியியல் கல்லூரி வளாக மாணவர் விடுதியில் 225 படுக்கை வசதிகளும், மாணவியர் விடுதியில் 225 படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தேனி நகராட்சியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோயில்கள், சந்தைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்|படுத்த வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE