தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சித்திரை விஷூ நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
இதையொட்டி, வீடுகளை சுத்தம் செய்து, மா இலை தோரணம் கட்டி, மா, பலா, வாழை உள்ளிட்ட கனிகளுடன் வெற்றிலை பாக்கு, தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு உள்ளிட்டவைகள தாம்பூலத்தில் வைத்து, அதை சுவாமி அறையில் கண்ணாடி முன்வைத்து அதிகாலை எழுந்தவுடன் அதை தரிசனம் செய்து பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர்.
கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. சேலம் ராஜகணபதி கோயிலில் நடந்த விஷூ கனி நிகழ்ச்சியில் சிறப்பு அபிஷேகமும் பின்னர் தங்கக் கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சேலம் காசி விஸ்வநாதர் கோயில், எல்லைப்பிடாரியம்மன் கோயில், கரபுரநாத சுவாமி கோயில், சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கோயில்களில் கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் சுவாமியை தரிசனம் செய்தனர்.
கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி பண்ணாரி, பவானி, கொடுமுடி கோயில்களில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சுவாமிகளுக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.பிலவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்த சித்திரை முதல் நாளான நேற்று பவானி சங்கமேஸ்வரர் - ஆதிகேசவப் பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் - வீர நாராயணப் பெருமாள், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம், கிருமிநாசினி, உடல்வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பூஜைப்பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கவில்லை. இதேபோல், பச்சமலை, பவளமலை, பாரியூர் அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் நேற்று விஷேச பூஜைகள் நடந்தன.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் விபூதி அலங்காரத்திலும், பெரிய மாரியம்மன் கனி அலங்காரத்திலும், ஈரோடு கோட்டை பெருமாள் கருட சேவை அலங்காரத்திலும், ஈரோடு கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். கோபி ஐயப்பன் கோயிலில் கனி அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார். கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திண்டல் முருகன் கோயிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடிவேரியில் தடை
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் பக்தர்கள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பவானிசாகர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago