வேலூரில் ரூ.6 லட்சம் பணம், வேலைக்காக - தொழிலாளியை கொலை செய்த மைத்துனர் கைது :

By செய்திப்பிரிவு

வேலூரில் உயிரிழந்த மாநகராட்சி துப்புரவு பணியாளரின் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய பணப்பலன் ரூ.6 லட்சம் மற்றும் கருணை அடிப்படையிலான வேலை கிடைக்க வேண்டி தொழிலாளியை கொலை செய்த மைத்துனரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் அடுத்த சித்தேரியில் உள்ள பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கடந்த 10-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் சுபா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த 3 விசிட்டிங் கார்டுகள், மருந்து சீட்டு மட்டும் இருந்தது.

தொடர் விசாரணையில், கொலையான நபர் வேலூர் பயர் லைன் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜன் (34) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் இறந்த ராஜனின் சகோதரி உஷாவின் கணவர் குமார் (37) என்பவரை காவல் துறையினர் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அதில், தனது மைத்துனரை மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை செய்ததை குமார் ஒப்புக்கொண்டார்.

தொடர் விசாரணையில், உயிரிழந்த ராஜனின் தாயார் லட்சுமி என்பவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்தவர் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். ராஜனுக்கு உஷா என்ற சகோதரியும் உள்ளார். எனவே, இறந்த லட்சுமிக்கு சேர வேண்டிய பணப்பலன் ரூ.6 லட்சத்தை மகன் ராஜனும், மகள் உஷாவும் பங்கிட்டுக் கொள்வதில் சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், மைத்துனர் ராஜனை கொலை செய்துவிட்டால் ரூ.6 லட்சம் பணம் முழுவதும் தனக்கே கிடைத்துவிடும் என்பதுடன் கருணை அடிப்படையில் மாநகராட்சியில் தனது மனைவிக்கு வேலை கிடைத்துவிடும் என குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த 7-ம் தேதி மைத்துனர் ராஜனை சித்தேரிக்கு வரவழைத்து மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். மதுபோதையில் மயங்கிய அவரின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி குமார் கொலை செய்துள்ளார்.

பின்னர், யாருக்கும் சந்தேகம் வராமல் அங்கிருந்து சென்றுள்ளார். ரூ.6 லட்சம் பணம் மற்றும் மனைவிக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் மைத்துனரை கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 7-ம் தேதி மைத்துனர் ராஜனை சித்தேரிக்கு வரவழைத்து மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். மது போதையில் மயங்கிய அவரின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி குமார் கொலை செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்