தக்காளி விலை வீழ்ச்சியால் ஏரியில் கொட்டிய விவசாயிகள் :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், வேதனையடைந்த விவசாயிகள் தக்காளியை பறித்து, அவதானப்பட்டி ஏரியில் வீசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்கின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளியை, விவசாயிகள் நேரடியாக ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட், கிருஷ்ணகிரி, ஓசூர் உழவர் சந்தை, ஓசூர் பத்தலப்பள்ளி சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. நிகழாண்டில் போதிய மழையின்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்த நிலையிலும், தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்தனர்.

இதுதொடர்பாக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கூறும்போது, போதிய மழையில்லாமல் வறட்சியிலும் கடன் பெற்று தக்காளி சாகுபடி செய்துள்ளோம். கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் சரிவை சமாளித்து தக்காளி பயிரிட்டுள்ளோம். ஆனால், தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது கிலோ ரூ3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு போக்குவரத்து, பறிக்கும் கூலி கூட கிடைப்பதில்லை.

தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விடவும் முடியவில்லை. இழப்பினை சந்தித்தாலும், தோட்டத்தை பராமரிக்க, பறிக்கப்படும் தக்காளியை ஏரியில் விவசாயிகள் சிலர் கொட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு தக்காளி விலை வீழ்ச்சி நீடிக்கும். அதனைத் தொடர்ந்து உற்பத்தி குறையும்போது, தக்காளி விலை உயர்ந்து காணப்படும். இந்த ஏற்றதாழ்வுகளை சீர் செய்ய, கிருஷ்ணகிரி அல்லது ராயக்கோட்டையை மையமாகக் கொண்டு தக்காளி பழச்சாறு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தக்காளி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வருவாய் இல்லாவிட்டாலும், இழப்பை சந்திக்காமல் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள உதவும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்