தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருப்பதால், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அபராதம் செலுத்தி வருவதாக கொள்முதல் நிலைய பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியின்போது விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக, தமிழக அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்முதல் முடிந்தாலும், காலதாமதமாக சாகுபடி பணியைத் தொடங்கிய பூதலூர், திருவையாறு வட்டாரங்களில் தற்போதும் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, பூதலூர், சித்திரைக்குடி, நந்தவனப்பட்டி, புதுக்கரியப்பட்டி, கண்டமங்கலம், கச்சமங்கலம், மருதகுடி, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை பாதுகாக்க போதியளவு தார்ப்பாய்கள் இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகின்றன.
இதனால் ஏற்படும் இழப்பை கொள்முதல் நிலைய பணியாளர்களே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பணியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியது:
பூதலூர், திருவையாறு வட்டாரங்களில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 6,000 முதல் 13,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. இந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் இல்லை.
தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால் மூட்டைகள் மழைநீரில் நனைந்து, நெல்மணிகள் வீணாகி வருகின்றன. இதனால் ஏற்படும் இழப்புக்கு அபராதம் என்ற பெயரில் நாங்களே கூடுதல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.19-க்கு கொள்முதல் செய்யும் நாங்கள், அபராதமாக கிலோவுக்கு ரூ.36 கட்ட வேண்டியுள்ளது.
மேலும், கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை முதலில் அரைவைக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்தாலும், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள மூட்டைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கம் செய்யப்படுவதால், கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல அலுவலக மேலாளர் நத்தர்ஷா கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், வெளி மாவட்டங்களுக்கு 2.15 லட்சம் டன், மாவட்டத்தில் உள்ள 3 அரசு நவீன அரைவை ஆலைகளுக்கு 29 ஆயிரம் டன், தனியார் நெல் அரைவை ஆலைகளுக்கு 98 ஆயிரம் டன் நெல் அரைவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பூதலூர், திருவையாறு வட்டாரங்களில் மட்டுமே 43 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு போதியளவு தார்ப்பாய்கள் இருப்பதால், மழை பெய்தாலும் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியும். மேலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காதவாறு, அவ்வப்போது இயக்கம் செய் வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago