சத்திரம்புதுக்குளம் இளைஞர் கொலையில் - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே உள்ள சத்திரம்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி அஜிதா, தந்தை பெருமாள், அண்ணன் அருண் உள்ளிட்டகுடும்பத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அதில் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அந்த கேனை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, “அஜித் கொலை வழக்கில் ஒருசில குற்றவாளிகளை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரிந்தும் போலீஸார் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை. ஆனால், விசாரணை என்ற பெயரில் எங்களை அழைத்து துன்புறுத்துகிறார்கள். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் ”என்று தெரிவித்தனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

விவசாயிகள் மனு

மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாய நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவிவரம்:

மணிமுத்தாறு பகுதி விவசாயிகளுக்கு பிசான சாகுபடியில் போதிய லாபம் கிடைக்கவில்லை. தற்போது மணிமுத்தாறு அணையில் அதிகளவில் தண்ணீர் உள்ளது. எனவே, முன்கார் சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்