போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக மதுரை மேலமடை சிக்னலில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை அண்ணாநகர், அண்ணா பேருந்து நிலையம், சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத் தாவணி, பாண்டி கோயில் பகுதிகளில் இருந்து நகரின் பிற இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மேலமடை சிக்னல் சந்திப்பைக் கடந்து செல்ல வேண்டும். நான்குமுனை சந்திப்பான இப்பகுதியில் பழைய சிவகங்கை சாலை, சென்ட்ரல் மார்க்கெட் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும், மறுமார்க்கமாகத் திரும்பிச் செல்லும் வாகனங்களுமே அதிகம். இச்சந்திப்பில் காலை 8.30 முதல் 10.30 மணி வரை ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நேரத்தில் சிவகங்கை சாலையில் பெட்ரோல் பங்க் வரையிலும், அண்ணா நகர் சாலையில் சுகுணா ஸ்டோர் வரையிலும், கேகே.நகர் சாலை யில் அப்போலோ மருத்துவ மனையைக் கடந்தும் சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கின்றன.
வட்டச் சாலையில் (ரிங் ரோடு) ஏதாவது மாநாடு நடந்தாலும் இப்பகுதியில் நெருக்கடி ஏற்படுகிறது. சிவகங்கை சாலையைத் தவிர மற்ற 3 சாலைகளும் ஓரளவுக்கு அகலமாக இருந்தாலும், சிவகங்கை சாலையில் மேலமடை பேருந்து நிறுத்தம் வரை ஒருவழிப் பாதைக்கான அகலமே உள்ளது. மேலும் சாலையையொட்டி ஒருபுறம் வண்டியூர் கண்மாய் கரை, எதிரே குடியிருப்புகளும் இருப்பதால் சாலையை அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் சிக்னலைக் கடப்பதில் நெரிசல் தொடர்கிறது.
இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறையினர் கூறியதாவது:
மதுரையில் அதிகப் போக்குவரத்து மிகுந்த சிக்னலாக மேலமடை மாறியுள்ளது. சிவகங்கை சாலை குறுகி இருப்பதால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. நெருக்கடியைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம். கேகே. நகர் சாலையில் இருந்து வாகனங்கள் சிவகங்கை சாலைக்கு இடதுபுறமாக நிற்காமல் செல்ல கால்வாய் பாலம் ஒன்று இடை யூறாக உள்ளது. மேலும் வண்டியூர் கண்மாய் மேற்கு முகப்பில் பாண்டி கோயிலும் இருப்பதால் சாலையை அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது.
கேகே. நகர் சாலையில் இருந்து கோயிலுக்கு வடபகுதியில் புதிய சாலை ஏற்படுத்தி மேலமடை பேருந்து நிறுத்தம் அருகே இணைக்கலாம் என யோசனை இருந்தாலும் இதுகுறித்து பொதுப்பணித் துறை, மாவட்ட நிர்வாகம்தான் முடி வெடுக்க வேண்டும்.
சிவகங்கை சாலையில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டரில் தொடங்கி சிக்னலைக் கடந்து கோமதிபுரம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் வாகனங்கள் இறங்கும் வகையில் மேம்பாலம் கட்டும் திட்டத்துக்கு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்து தேர்தலால் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைத்தால் மட்டுமே சிவகங்கை சாலையில் செல்லும் வாகனங்கள் இடையூறின்றி செல்ல முடியும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago