பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை தாணிப்பாறை பகுதியில் குவிந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை.
நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலைக்குள் பக்தர்கள் அனைவரும் மலையடிவாரத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago