ஆரணி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளை ஞரை அடித்துக் கொலை செய்யப் பட்டதாகக் கூறி, ஆரணி நகர காவல் நிலையத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசிப்பவர் மோகன். இவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப் பாடி கிராமத்தில் டிராக்டர் மூலம் வைக்கோல் உருட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து, பலாந்தாங்கல் கூட்டுச் சாலையில் உள்ள கோயில் அருகே டிராக்டரை நிறுத்தி விட்டு உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர், மோகனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்து கிராம மக்கள் விரட்டியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க, இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், இரண்டு பேர் தப்பித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தில் வசித்த சக்திவேல் (27), ஆரணி பாளையத்தில் வசிக்கும் சூர்யா(25), பலாந் தாங்கல் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன்(25) என்பதும், இவர்கள் மீது வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர் சக்திவேல் என்பதும், தப்பித்து சென்றவர்கள் சூர்யா, மணிகண்டன் என்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மோகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், விபத்தில் படுகாயமடைந்ததாக கூறப்படும் சக்திவேல், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், சக்திவேல் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். அப்போது, ஆரணி நகர காவல் நிலையத்தில் கூடுதல் எஸ்பி அசோக்குமார் இருப்பதை அறிந்து கொண்ட உறவினர்கள் ஆரணி நகர காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், சக்திவேலுவை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையறிந்த கூடுதல் எஸ்பி அசோக்குமார், சக்திவேல் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம், சக்தி வேலுவின் தாயார் அலமேலு அளித் துள்ள புகார் மனுவில், “எனது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி புகார் கொடுக்க, ஆரணி கிராமிய காவல் நிலையம் சென்றேன். அப்போது, எனது மகன் சக்திவேல் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆய்வாளர் முத்துகுமார் கூறினார். மேலும், எனது புகார் மீது விசாரிக்க முன்வராமல், எங்களை விரட்டினார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகன் 10-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
எனது மகனை அடித்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு சாதகமாக ஆய்வாளர் முத்து குமார் செயல்பட்டுள்ளார். எனது மகனை அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் முத்துகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பின்னர் அவர்களிடம், தனிப்படை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் எஸ்பி உறுதி அளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், தப்பித்து சென்றதாக கூறப்படும் சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோர் பிடிபட்ட தால்தான் உண்மை விவரம் தெரியவரும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago