திருப்பத்தூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினசரி கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் கூடுதல் அரசு தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) செந்தில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குறைந்தது. மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி வரை 7,959 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 128 பேர் உயிரிழந்துள்ளனர். 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 லட்சத்து 702 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் கல்லூரிகள் 11 மையங்கள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 603 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி முகாம்கள் மூலம் தினசரி 5 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் நோய் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். கரோனா விதிகளை கடை பிடிக்காத பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.23 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த மகளிர் குழுவினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்களை கொண்ட 208 கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்பதை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யவும் வெளியூர்களில் இருந்த வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தவும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை 14 நாட்களுக்கு கண்காணிக்கவும் வேண்டும்.
முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே வந்தால் ரூ.500, அரசின் விதிகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கை பாரபட்சமில்லாமல் செயல்படுத்த வேண்டும். கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள், தகவல்கள் இருந்தால் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04179-222111 அல்லது 229008 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கட்டப் பட்டுள்ள புதிய குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் கரோனா நோயாளிகள் நல சிகிச்சை சிறப்பு மையத்தையும் கரோனா தடுப்பூசி மையத்தை அரசின் கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago