விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே விவசாயிகள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விருத்தாசலம், திட்டகுடி, கம்மா புரம், வேப்பூர், முஷ்ணம் உள்ளிட்ட உள்ளூர் விவசாயிகளும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சேலம், பெரம்பலூர் பகுதி விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் அதிக அளவில் நெல் மூட்டை களை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர்.
ஒரு மூட்டைக்கு எடை போடும் கூலியாக ரூ. 8-ஐ ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் வியாபாரிகளிடம் பெற்று எடை போடும் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவது வழக்கம். கடந்த 2 நாட்களாக எடை போடும் கூலியை வியாபாரிகளிடம் நேரடியாக பெற்றுக் கொள்ளுமாறு எடை போடும் தொழிலாளர்களிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எடை போடும் தொழிலாளர்கள், "நாங்கள் நேரடியாக வியாபாரிகளிடம் கூலியை பெறமாட்டோம். நீங்கள் தான் வாங்கி தர வேண்டும்" என்று ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து கடந்த 2 நாட்களாக எடைபோடும் பணியையும் நிறுத்தியுள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று கடலூர்- விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்து சென்ற விருத்தாசலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago