வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு : விருதுநகர் மாவட்டத்தில் 200 போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் உள்ள 2,370 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகர் வித்யா பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டன.

அதில் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வரிசை எண் படி அடுக்கி வைக்கப்பட்டு ‘சீல்' வைக்கும் பணி நேற்று காலை நடைபெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியான வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர், தேர்தல் பொது பார்வையாளர், அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டன. இந்த அறைகளுக்கு முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி வளாகத்தில் 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படை போலீஸார் என மொத்தம் 200 பேர் மூன்றடுக்குப் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்