தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் : நம்மாழ்வார் பிறந்தநாள் கருத்தரங்கில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டப்பூர்வமாக்கி, வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என நம்மாழ்வார் பிறந்தநாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நேற்று முன்தினம் திருவாரூரில் சூழலியல் செயல்பாட்டாளர்கள் சார்பில் நடைபெற்றது.

திருவாரூர் இயற்கை நல வாரியத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். சூழலியல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், வேளாண் அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் வரதராஜன் நன்றி கூறினார். கருத்தரங்கில், தமிழக அரசு இயற்கை விவசாயக் கொள்கை வகுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை சட்டப்பூர்வமாக்கி, வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சூழலியல் பாதுகாப்பு, இயற்கை மீட்டெடுப்பு தொடர்பான பாடத்திட்டங்களை சேர்க்க வேண்டும்.

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உயிர் சத்துக்கள் நிரம்பிய பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களில் சமைக்கப்பட்டதை உணவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 83-வது பிறந்தநாள் விழா நீடாமங்கலம் சந்தானராமசாமி கோயில் நந்தவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் செ.ராஜீவ் உள்ளிட்ட சூழலியல் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்