சூரிய ஒளியில் இயங்கும் கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரத்தை (சோலார் இன்குபேட்டர்), தனியார் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த மாதவரத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் இயங்கும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிமயமாக்கல் ஆய்வு மையம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு தேவையான நவீன கருவிகளை குறைந்த விலையில் வடிவமைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
அந்தவகையில் பல்கலை. ஆய்வு மையம் சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சூரிய ஒளியில் இயங்கும் வகையிலான கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரம் (சோலார் இன்குபேட்டர்) தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியின் மாணவிகளுடன் இணைந்து பல்கலை. பேராசிரியர்கள் ர.வெங்கடரமணன், கே.சங்கிலி மாடன் ஆகியோர் இந்த கருவியை வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு மையத்தின் தலைவர் சு.மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:
இயற்கை முறையிலான கோழி வளர்ப்பில் ஒருமுறைக்கு 10 முதல் 15 அடை முட்டைகளை மட்டுமே வைத்துக் குஞ்சு பொரிக்க முடியும். அவ்வாறு பொரித்த குஞ்சுகளை தாய்க்கோழி குறிப்பிட்ட வயது வரை பாதுகாத்து குஞ்சுகள் தன்னிச்சையாக வளரும் வரை முட்டைகள் இடாது.
அதனால் ஒரு நாட்டுக்கோழியிடம் இருந்து ஆண்டுக்கு 50 முதல் 60 முட்டைகள் மட்டுமே கிடைக்கும். இதைத் தவிர்த்து அதிக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்க ஏதுவாக புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு சிறிய அளவிலான இன்குபேட்டர்களை தயாரித்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்துவருகிறோம்.
இந்த இன்குபேட்டர் மின்சார சக்தியில் இயங்கும். ஒரே நேரத்தில் 100 முட்டைகளை அடைகாக்க முடியும். அதில் சராசரியாக 80 சதவீத கோழிக்குஞ்சுகளானது ஆரோக்கியமாக வெளிவரும். கிராமப்புறங்களில் அதிக கோழிகளை வளர்க்கும் சிறு, குறு பண்ணையாளர்களிடம் இந்த இயந்திரத்துக்கு நல்ல வரவேற்புள்ளது.
அதேநேரம் கிராமப்புறங்களில் நிலவும் மின்தடை மற்றும் மின் ஏற்றத்தாழ்வுகளால் இன்குபேட்டர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப்பட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை வெகுவாகப் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை சரிசெய்வதற்காக பனிமலர் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து சோலார் இன்குபேட்டர் தயாரித்துள்ளோம். இந்த சோலார் இன்குபேட்டர் மின்தடை ஏற்படும் நேரங்களில் சூரியஒளியில் கிடைக்கும் சக்தி மூலம் செயல்படும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர், இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் இரவு நேரங்களிலும் குஞ்சு பொரிப்பில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.
இந்த சோலார் இன்குபேட்டர் பரிசோதனை முயற்சியில் 75 சதவீதம் குஞ்சுகள் பொரிக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலும் அதிகரிப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் கூறும்போது, ‘‘நம்நாட்டிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்துள்ளோம். புறக்கடைக் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்தக் கருவி பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
சோலார் பேனல் அமைப்பதற்கான செலவை மானியமாகத் தந்தால் பெருவாரியான விவசாயிகள், பண்ணையாளர்கள் பயனடைவார்கள். இந்த கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட பனிமலர் கல்லூரி பேராசிரியர் எஸ்.செல்வி மற்றும் மாணவிகள் ஏ.ஹாரிணி, வி.அபர்ஷா, டி.தார்சினி, எஸ்.ஜீடித் பெர்சியா ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago