நாமக்கல் மாவட்டத்தில் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து வாக்களிக்க வருவோருக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் கையுறை, உடல் வெப்பநிலை கண்காணித்தல் மற்றும் கிருமிநாசினி வழங்குதல் போன்றவை பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

மேலும், பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாதிரி வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவையும் ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2,049 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 6 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு பழுது ஏற்பட்டது.

அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு விதிமுறையின் கீழ் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் காவல் துறையினர் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

மாவட்டத்தில் 1028 வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்