தஞ்சாவூர் மாவட்டத்தில் 72.17 சதவீத வாக்குப்பதிவு :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 72.17 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

இதில், திருவிடைமருதூர் தொகுதியில் 65.46 சதவீதமும், கும்பகோணம் தொகுதியில் 71.44 சதவீதமும், பாபநாசம் தொகுதியில் 74.24 சதவீதமும், திருவையாறு தொகுதியில் 78.13 சதவீதமும், தஞ்சாவூர் தொகுதியில் 65.71 சதவீதமும், ஒரத்தநாடு தொகுதியில் 78.24 சதவீதமும், பட்டுக்கோட்டை தொகுதியில் 71.75 சதவீதமும், பேராவூரணி தொகுதியில் 77.09 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,886 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால், மாற்று இயந்திரம் கொண்டு வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கியது. வாக்காளர்கள் பெரும்பாலானோர் காலை முதலே நீண்டவரிசையில் வந்து காத்திருந்து வாக்களித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

கரோனா பரவல் காரணமாக, வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தும், சானிடைஸர், முகக்கவசம் வழங்கியும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வயதானவர்கள் வாக்களிக்க ஏதுவாக, சக்கர நாற்காலிகள் தன்னார்வலர்களை கொண்டு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டது.

ஈச்சங்கோட்டை வாக்குச்சாவடி மையத்தில் 82 வயதான ராமசாமி, வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலி உதவியுடன் வந்து வாக்களித்தார்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர், போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என 5,192 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்