கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நா.கார்த்திக், சித்தாபுதூர்பகுதியில் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பாப்பநாயக்கன்பாளையம், பழையூர், ஆவாரம்பாளையம்,பீளமேடு, நீலிக்கோணாம்பாளையம், வரதராஜபுரம், இஎஸ்ஐ, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் நா.கார்த்திக், மசக்காளிபாளையத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
‘உதயசூரியன்’ சின்னத்தில் தனக்கு வாக்களித்து, தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேட்பாளர் நா.கார்த்திக் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் வேட்பாளர் நா.கார்த்திக் பேசும் போது, ‘‘நான் வெற்றி பெற்றால், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் வளம் மேம்பட, வளர்ச்சியடைய நடவடிக்கை எடுப்பேன். தொழில்துறையினரின் பயன்பாட்டுக்காக அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைத்துத் தருவேன். பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனி , தண்ணீர் பந்தல் சாலை ரயில்வே மேம்பாலப் பணியை விரைவில் நிறைவேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பேன். மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், பாதாள சாக்கடைத் திட்டப்பணியை முடித்துத் தருவேன். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. திமுகவில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். கரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால், அதிமுக அரசு ரூ.ஆயிரம் மட்டுமே தந்தது. அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அனைத்து அடிப்படை கட்டமைப்புப் பணிகளும் இத்தொகுதியில் நிறைவேற்றித் தரப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்,’’ என்றார். இப்பிரச்சாரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago