இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும்
40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது. இயேசு உயிர் துறந்த புனித வெள்ளி கடந்த 2-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டது.
சின்னக்கோயில் என்றழைக்கப்படும் தூத்துக்குடி திருஇருதய பேராலயத்தில் நடைபெற்ற இயேசு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலியை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையேற்று நடத்தினார்.
தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி புனித அந்தோனியார் ஆலயம், புனித சார்லஸ் ஆலயம், தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், யுதா ததேயு ஆலயம், புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம், பாத்திமா மாதா ஆலயம், ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயம், லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் ஆலந்தலை, மணப்பாடு, அமலிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு என நான்கு வகையான வழிபாடுகள் நடைபெற்றன. திரளான இறைமக்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி கலந்துகொண்டனர். தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காட்டப்பட்டன.
இதுபோல், தூத்துக்குடி மட்டக்கடை தூய பேட்ரிக் தேவாலயம், கீழ சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம், எட்டயபுரம் சாலை தூய மிகாவேல் ஆலயம், டூவிபுரம் தூய ஜேம்ஸ் ஆலயம் மற்றும் நாசரேத், மெஞ்ஞானபுரம், பிரகாசபுரம் உள்ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
திருநெல்வேலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஒளி வழிபாடை தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவாலயங்கள் மின்னொளியில் ஜொலித்தன.நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது.
கோவில்பட்டி
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. நள்ளிரவு12 மணிக்கு இயேசு கிறிஸ்து உயிர் பெற்று வருவதுபோன்ற காட்சி தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியுடன் பாஸ்கா பாடல்கள் பாடினர். திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஒருவருக்கொருவர் ஈஸ்டர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago