புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புனித வெள்ளியை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெற்றன.

ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதிசாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது. ஏசு உயிர்நீத்த தினமானபுனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற திருச்சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தூத்துக்குடி திருஇருதய பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புபிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாட்டில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டார்.

புனித அந்தோனியார் ஆலயம்,தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்,யூதா ததேயு ஆலயம், புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம், பாத்திமாமாதா ஆலயம், புளியம்பட்டி அந்தோனியார் ஆலயம், காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல்மாதா ஆலயம் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி மட்டக்கடை தூயபேட்ரிக் தேவாலயம், கீழ சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம், எட்டயபுரம் சாலை தூய மிகாவேல் ஆலயம், டூவிபுரம் தூய ஜேம்ஸ்ஆலயம், நாசரேத், மெஞ்ஞானபுரம், பிரகாசபுரம் தேவாலயங்கள் உட்படஅனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களில் காலை தொடங்கி மாலை வரை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முகக்கவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலையில் மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் திருச்சிலுவை வழிபாடுகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியேபெரிய சிலுவைப்பாதை நடைபெற்றது. இந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் ஏசுவின் பாடுகளின் 14 நிலைகள் குறித்து தியானிக்கப்பட்டது.

இதுபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையிலுள்ள புனிதஅந்தோனியார் ஆலயம், கல்வெட்டான்குழியிலுள்ள அந்தோனியார் ஆலயம், சேவியர் காலனியிலுள்ள அந்தோனியார் ஆலயம், திருநெல்வேலி டவுனிலுள்ள மாதா ஆலயம், சாந்திநகர் குழந்தை எசு ஆலயம், உடையார்பட்டியிலுள்ள திருஇருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் திருச்சிலுவை வழிபாடுகள் நடைபெற்றன.

இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடும், சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன

இதன் தொடர்ச்சியாக நாளை(ஏப்.4) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழி பாடுகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்