தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் என்எல்சி சோலார் மின் நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற, ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊழியர் கிருஷ்ணன் (40) என்பவரும் வெட்டப்பட்டார். இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்பட்ட, ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் (22), சத்யா (21),காளிராஜன் (24), சுப்பையாபுரத்தைச் சேர்ந்த முருகன் (39) ஆகிய 4 பேர், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.
நிலப்பிரச்சினையில் இக்கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு தேவையான நிலங்களை வாங்குவது, பணம் பட்டுவாடா செய்வது போன்ற பணிகளை தியாகராஜன் செய்துவந்துள்ளார். இவ்வாறு நிலம் வாங்கியது தொடர்பான பிரச்சினையில் தியாகராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago