வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1 வரை தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலம் அனுப்பலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, பரமக்குடி(தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று 3-ம் கட்டமாக தேர்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி மையத்திலேயே வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்த அதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டன. அதில் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குளை செலுத்தினர். இந்த பயிற்சி வகுப்பினை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது, சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக 1647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் வாக்குப்பதிவு நாளன்று 7905 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் 7905 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 2472 காவல் துறை அலுவலர்களில் இதுவரை மொத்தம் 9,311 பேர் தபால் வாக்குக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
தேர்தல் பயிற்சி முடிந்ததும் அந்தந்த பயிற்சி மையங்களிலேயே அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறைவாக ஏப்ரல் 5-ம் தேதி ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமும் தேர்தல் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்தலாம். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1-ம் தேதி அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை கட்டணமின்றி அஞ்சலகம் மூலமாகவும் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago