பவானி தொகுதியில் விவசாய நிலத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், அத்தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு வாக்களிக்க மாட்டோம் என ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சருக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே அய்யன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்குள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விளை நிலங்களைக் கையகப் படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயன்வலசு, மாணிக்கவலசு, காசிகவுண்டன்புதூர், வெங்கமேடு, பெரியகவுண்டன்வலசு உள்ளிட்ட 52 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்தல்அறிவிக்கப்பட்ட நிலையில்,தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு வெளியிட்டனர். கிராம மக்களிடம் வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேச்சு நடத்தியும் பலன் இல்லை.
இந்நிலையில், பவானி தொகுதியில் போட்டியிடும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்கள் பகுதிக்கு அமைச்சர் வாக்கு கேட்டு வரக்கூடாது என்றும், அவர் பணம், பொருள் கொடுத்தால் வாங்கக்கூடாது, அதிமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்றும் கிராம மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், ’அடுக்குமாடி குடியிருப்பைக் கொண்டு வந்து விவசாயத்தை அளிக்கத் துடிக்கும் கே.சி.கருப்பணனுக்கு எங்கள் ஓட்டு இல்லை - விவசாய நிலமீட்பு கூட்டமைப்பு (52 கிராம மக்கள்)’ என்ற ஸ்டிக்கர் அடிக்கப்பட்டு, கிராமங்களில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் தரப்பினர், ‘வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக – பாமக கூட்டணிக்கே எங்கள் ஓட்டு’ என்ற போஸ்டர்களை கிராமங்கள் தோறும் ஒட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago