கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் வருகையால் - நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் அடுத்தடுத்து வருவதால் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய 5 தொகுதிகளில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. திருச்செங்கோடு தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் போட்டியிடுகிறார்.

இவைதவிர, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அவரவர் தொகுதியில் போட்டிப் போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், கட்சி நட்சத்திர பேச்சாளர்கள் என நாள்தோறும் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சியான பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில துணைச் செயலாளர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுபோல் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணித் தலைவர் எம்பி கனிமொழி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என தொடர்ச்சியாக கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

வரும் நாட்களில் நட்சத்திர பேச்சாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் வருகையின் போது அவர்களைக் காணவும், பேச்சைக் கேட்கவும் மக்கள் திரண்டு வருவதால் நாமக்கல் மாவட்ட தேர்தல் களம் விறுவிறுப் படைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்