ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல் துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்கு தபால் வாக்குகள் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டிருந்தன.
ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் வாக்குகள் அளிக்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், அரக்கோணம் (தனி) தொகுதியில் 48 பேர், சோளிங்கர் தொகுதியில் 101 பேர், ராணிப்பேட்டை தொகுதியில் 150 பேர், ஆற்காடு தொகுதியில் 151 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 308 பேர் என மொத்தம் 758 தபால் வாக்குகள் அளிக்க விண்ணப்பங்களை பெற்றிருந்தனர். அவர்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. காவல் துறையினர் தபால் வாக்கு விண்ணப்பங்ளை பூர்த்தி செய்து தங்களது வாக்குகளை பதிவு செய்து அதற்குரிய பெட்டியில் செலுத்தினர். இதனை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago