நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தவிர மீதம் உள்ள நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16-க்கும் மேல் உள்ளது. எனவே கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் தற்போது இருப்பு உள்ள 1,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்துள்ள 640 இயந்திரங்களும் சேர்த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தேர்வு செய்தார்.
இதைத்தொடந்து நாமக்கல் சட்டப்பேரவைத்தொகுதிக்கு 460 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பப்பட்டன. இதுபோல் பரமத்திவேலூர் தொகுதிக்கு 390, திருச்செங்கோடு தொகுதிக்கு 400, குமாரபாளையம் தொகுதிக்கு 436 என மொத்தம் 1,686 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ராசிபுரம் (தனி) தொகுதிக்கு 15 கூடுதல் கட்டப்பாட்டு இயந்திரங்கள், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கு தலா 20 கட்டுப்பாட்டு இயந்திரம், பரமத்தி வேலூர் தொகுதிக்கு 15 இயந்திரம் என மொத்தம் 110 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுபோல் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு தலா 20 மற்றும் குமாரபாளையம் தொகுதிக்கு 19 என மொத்தம் 119 விவிபேட் இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், தேர்தல் வட்டாட்சியர்கள் திருமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago