ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அரசு மையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாற்ற உள்ள அரசுத்துறை அலுவலர்கள் என 20,000 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்களில் இதுவரை 28 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளதால், மக்கள் விருப்பத்தை கேட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. மருந்துகள் வீணாகாமல் தடுக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் அல்லது 20 பேர் சேர்ந்தவுடன் தடுப்பூசி போட அறிவுறுத்தி உள்ளோம். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நலமாகவே உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago