திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் பயன்படுத்த தேவையான கரோனா பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வாக்குப்பெட்டிகளுடன் கொண்டு செல்லப்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதிஒரே கட்டமாக நடைபெறு கிறது. தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடி மையங் களில் தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் தயார் செய்யும் பணிகள் திருப்பத்தூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘ கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் ஒரு அட்டை பெட்டியில் 13 மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் உடல் வெப்பமானி, கிருமி நாசினி, முகக்கவசங்கள், கையுறைகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உடல் முழுவதும் மறைக்கும் பிபிஇ கிட்டுகள், ஓஆர்எஸ் பவுடர், பயன்படுத்தப்பட்ட கையுறை,முகக்கவசங்கள், மருத்துவக்கழிவு களை போட பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, குப்பைக்கழிவுகளை வெளியே கொண்டு செல்ல மஞ்சள் பை உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் அந்த அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவ உப கரணங்கள் அடங்கிய தொகுப்பு வரும் ஏப்ரல் 5-ம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும்போது உடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கரோனா பரவல் குறித்த அச்சம் இல்லாமல் தங்களது வாக்குகளை செலுத்தலாம்’’. என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் காமராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago